
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விலை உயர்வு பின்னலாடை உற்பத்தியாளர்களை வெகுவாக பாதித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களும் கிலோவிற்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் விலை உயர்வை கண்டித்து முழு கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி நூல் விலை கிலோவிற்கு ரூ 10 குறைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்று மாதங்களில் கிலோவிற்கு ரூ.80 வரை உயர்த்தப்பட்டது.
இச்சூழலில் தற்போது இந்த மாதம் அனைத்து ரக நூலின் விலையும் கிலோவிற்கு ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் உரிமையாளர்கள் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழிற்துறையினருக்கு இந்த விலை உயர்வு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும், எடுத்த ஆர்டர்களுக்கு தேவையான நூலை கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய வாய்ப்புள்ளதாக தொழிற்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.