
2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடுமையாக பெய்த மழை நாளில் சீட்டு கட்டு சரிவது போல் சரிந்தது சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டி முடிக்கபடாத 11 மாடி கட்டடம்.
இரட்டை கோபுரம் போன்ற வடிவில் கட்டப்பட்ட இந்த கட்டடம் களிமண் பூமியில் கட்டுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் ஓட்டு மொத்தமாக சரிந்து விழுந்தது.
61 பேர் தங்கள் இன்னுயிரை இழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
புதிய கட்டடத்தில் வாழபோகிறோம்.. புதிய வீடு நமக்கு சொந்தாமாகிறது என்ற ஆசையோடு லட்சகணக்கில் பணத்தை கட்டியிருந்த பலர் தற்போது நடைபிணமாகிவிட்டது தனிக்கதை.
இந்த நிலையில் மீதமிருந்த மற்றொரு கட்டிடத்தையும் இடித்து தள்ள வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனி குழு அமைத்து கட்டிடத்தின் உறுதிதன்மையை ஆராய செய்தது.
4 பேர் கொண்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மீதமுள்ள கட்டடத்தையும் இடிக்க வேண்டுமென அறிக்கை அளித்தனர்.
இதன் அடிப்படையில் நீதிமன்றமும் கட்டிடத்தை இடித்து தள்ள உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாகவே இதற்கான ஏற்பாடுகளை இடிக்கும் பணி ஒப்படைக்க maglink infra என்ற நிறுவனத்தினர் செய்து வந்தனர்.
கட்டடத்தில் உள்ள 162 தூண்களிலும் தலா 5 துளைகள் போடப்பட்டு RDX போன்ற வெடிமருந்துகள் நிரப்பப்படும். ஒவ்வொரு துளையின் ஆழமும் அதிகமாக போடப்படுவதால் கட்டிடம் வெடித்து சிதறாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டிடத்தின் தரைத்தள பகுதியில் அதிக சக்தி கொண்ட ஜெல்லட்டின், அம்மோனியம் நைட்ரேட், gun powder, rdx போன்ற அனுமதிக்கப்பட்ட வெடி பொருட்கள் நிரப்பப்பட்டு மின்சார வயர்கள் மூலம் இணைக்கப்பட்டு வெடிக்க வைக்கபடும்.
தீபாவளிக்கு ஏதோ பட்டாசு வெடிக்கும் சத்தத்தை போன்ற ஒலி மட்டுமே ஏற்படும். அதனால் அருகில் உள்ள மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
அதி நவீன முறையில் வெடி வைத்து மிகபெரிய கட்டடத்தை தகர்க்கும் இந்த முறையில் டன் கணக்கில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு நிரப்பபட்டும் விட்டன.
சென்னையில் தற்போது விட்டு விட்டு கடும் மழை பெய்து வந்தாலும் வெடி வைத்து தகர்க்கும் பணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
காரணம் கட்டடத்தை தகர்க்ககூடிய வெடிமருந்துகள் அனைத்தும் மழையில் நனையாத இடத்தில உள்ள 162 தூண்களில் மட்டுமே பொருத்தப்பட்டு ஒரே மின்சார ஒயரில் இணைக்கப்பட்டுள்ளது.
மிக பிரம்மாண்டமான ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யபடும் மின்சார வயர்கள் மூலம் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் 150 மீ தொலைவில் இருந்து பாதுகாப்பான இடத்தில இருந்து ரிமோட் மூலம் வெடி வைத்து தகர்க்கப்படும்.