
பெரம்பலூர்
வடகிழக்குப் பருவமழை தொடங்கி தொடர் மழை பெய்துவரும் நிலையில் பெரம்பலூரில் வெள்ளம் வந்தால் மக்களை பாதுகாக்க மிதவை படகுகள் முதல் தங்க வைக்கும் இடங்கள் வரை அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நேற்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில், வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னேற்பாடு நடவடிக்கைகள், டெங்குத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன், ஆர்.டி.இராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆட்சியர் பேசியது:
“வடகிழக்குப் பருமழை தொடங்கியுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பொதுப்பணித் துறையின் கீழ் 74 நீர்நிலைகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 136 நீர்நிலைகளும் உள்ளன. இதில் நான்கு நீர்நிலைகள் 75% க்கு மேலும், ஐந்து நீர்நிலைகள் 50 - 75% வரையிலும் கொள்ளவை எட்டியுள்ளது. மீதமுள்ள 201 நீர்நிலைகளின் கொள்ளவு 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளன.
மழைக் காலங்களில் மக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கத் தேவையான இடங்களும், அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்லவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தேவையான முதலுதவிகளை மேற்கொள்ளவும் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மக்களை நீரில் அழைத்து வர மிதவை படகுகள், மரங்கள் விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்த தேவையான இயந்திரங்கள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வருகிறது.
மழைக்காலங்களில் தங்களது பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் இலவச தொலைபேசி எண்களான 1077, 18004254556 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மனோகரன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.