
தேனி
சொத்து வரி உயர்வை ரத்து செய்ய மறுத்த நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டும் கூட்டரங்கை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு கதவை பூட்டியும் அனைத்துக் கட்சியினர் தங்களது கோரிக்கையை சாதித்து கொண்டனர்.
தேனி மாவட்டம், போடி நகராட்சியில் 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றிற்கு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 2010-2011 ஆம் நிதியாண்டில் இருந்து முன்தேதியிட்டு சொத்து வரி உயர்த்தப்பட்டு அதற்கான நிலுவைத் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று, நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பில் பல ஆயிரம் ரூபாய் நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
எனவே, அனைத்துக் கட்சிகளின் சார்பில் "சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி, போடி நகராட்சி ஆணையர் மு.சுவாமிநாதனிடமும், தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடமும் மனு அளிக்கப்பட்டது.
எனவே, அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த நேற்று மாலை நகராட்சிக் கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திமுக, காங்கிரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கட்சியினரும் வர தாமதமானதால் கூட்டம் தொடங்க இரவாகிவிட்டது. இந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சியினரும் சொத்து வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஆணையர், "இது தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையின் முடிவு. மேலும், கணினி மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதனால், அதிருப்தி அடைந்த அனைத்துக் கட்சியினரும் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். மேலும், கூட்டரங்கை விட்டு வெளியேற முடியாதபடி கதவை பூட்டினர்.
இதனையடுத்து, "சொத்து வரி வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நகராட்சி நிர்வாகத் துறையினரினர் அறிவுரைப் பெற்று கணினியில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்த பின்பு சொத்து வரியை வசூலிப்பதாகவும்" ஆணையர் சுவாமிநாதன் தெரிவித்தார். அதனையேற்ற அனைத்து கட்சியினர், முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.