
விழுப்புரம்
கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அனைத்துத் துறைகளும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பது குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தொழிலாளர் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமைத் தாங்கினார்.
அப்போது அவர் பேசியது: "கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க மாநில அளவில் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட, கோட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
கொத்தடிமைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் முகவர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபடும் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
இந்த செயல் திட்டம் மூலம் கொத்தடிமைத் தொழிலாளர்களாக கண்டறியப்பட்டு, விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறுவாழ்வு நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களுடைய மறுவாழ்வுக்காக கூடுதல் நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் குழந்தைகள் இலவச கல்வி, திறன் வளர் பயிற்சி, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை அரசால் செய்யப்படுகிறது. இதனை மேற்கொள்ள ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் ஆய்வாளர் ஜி.ராமு மற்றும் பிற துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.