
தேனி
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தேனி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரளாக வந்தனர்.
இவர்களுக்கு மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமைத் தாங்கினார். அவர்களுடன் மாவட்ட துணைச் செயலாளர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் வந்தனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
ஆற்றுமணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.
இயற்கை வளங்களை பாதுகாத்து, தமிழகம் பாலைவனமாவதை தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து முற்றுகையிட்டவர்களிடம் காவலார்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில துணைச் செயலாளர் பாரதி உள்பட 29 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.