அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு புதிய பெயர் சூட்டிய தமிழக அரசு!

By Manikanda PrabuFirst Published Jan 12, 2024, 3:34 PM IST
Highlights

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவதால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு இடம் கிடைப்பதில்லை.

இப்பிரச்சினைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக் கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி கூறுகையில், “மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சுமார் ரூ.66 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இந்த அரங்கை திறந்து வைக்கவுள்ளார்.” என்றார்.

ஜன.,31இல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்.,1இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

முன்னதாக, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 23ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு அலங்காநல்லூர் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒன்றிரண்டு பணிகள் காரணமாக அதற்குள் திறக்கவியலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனவரி 23ஆம் தேதியன்று புதிய ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இங்கு போட்டிகள் நடைபெறும் என தெரிகிறது.

புதிய ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

click me!