
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த தடையை மீறி போட்டியை நடத்துவோம் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், அமைப்பாளர்களும் அறிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு ஊர்வலத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தமிழகத்தில் தடையை மீறி திண்டுக்கல், சிவகங்கை, திருவள்ளூர், மதுரை, தூத்துக்குடி,தேனி, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காளைகளை அவிழ்த்து விட்டு மாடுபிடி வீரர்கள் மாடுகளை விரட்டி பிடித்தனர்.
அலங்காநல்லூரில் இன்று ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது..ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு ஊர் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பலரும் திரண்டு மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்தும், பீட்டாவிற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி ஜல்லிக்கட்டு எங்கள் உயிருடன் கலந்தது.
அதற்கு தடை விதிக்க இவர்கள் யார்? போட்டியை நடத்த வேண்டும் என்பதில் போரட்டகாரர்கள் உறுதியாக இருந்தனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் வாடிவாசல் முன்பு இருந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.இதனையடுத்து போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி தலைமையில் தடியடி நடத்தினர்.
இதில் பல காயமடைந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்க்கான இளைஞர்கள் , மாணவ மாணவியினர் , ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வாடிவாசல் முன்பு காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நன்றாக இருள் சூழ்ந்த பிறகும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இளைஞர்களும் மறுத்து போராட்டத்தை தொடர்கின்றனர். தடியடி நடத்தி கலைக்க ஏராளமான அதிரடி காவல் படையினர் அலங்காநல்லூரில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான ஊடகங்கள் அலங்காநல்லூரை விட்டு வெளியேறிய நிலையில் தொடர்ந்து 10 மணிநேரமாக உணவு, குடிநீர் இன்றி தொடர்ந்து போராட்டத்தை இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் மற்றும் எஸ்பி விஜயேந்திர பிதாரி ஆகியோர் முகாமிட்டுள்ளனர், போராட்டத்தை கைவிட இளைஞர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் பெண்களும் இணைந்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர் போராட்டம் இரவிலும் தொடர்கிறது.இரவு உணவும் தயாராகி வருகிறது. உணவு சமைக்கவிடாமல் போலீசார் மிரட்டல் விடுத்தும் வருகிறார்கள்.
ஊர் பெண்கள் அரணாக போராட்ட களத்தில் கலந்துகொண்டிருப்பதால் போலீஸ் தடியடி நடத்த தயக்கம். எராளமான போலீஸார் குவிப்பு. கிராமம் முழுவதும் போலீஸ் குவிப்பு. பதட்டமான சூழல் நிலவி வருகிறது.