மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் - பழனிசாமி விமர்சனம்

By Velmurugan sFirst Published Apr 11, 2024, 12:20 PM IST
Highlights

மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதில் கைதேர்ந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகரில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி. அருணாச்சலத்துக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  பேசியதாவது, அதிமுக கூட்டணி சார்பாக அருணாச்சலம் நிறுத்தப்பட்டு இருக்கிறார். 

திருப்பூர் என்று சொன்னாலே பின்னலாடை தொழில் சார்ந்த பகுதி. திமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் மோசமான நிலைக்கு சென்று விட்டது. பல லட்சம் பேர் பணி புரியும் இந்த தொழில் சீரழிந்து விட்டது. அம்மா அவர்கள் ஆட்சியின் போது சாயப்பட்டறை பிரச்சினை ஏற்பட்ட போது வட்டியில்லா கடனாக 200 கோடி கொடுத்தார்கள். இன்றைக்கு மோசமான நிலையில் இந்த தொழில் உள்ளது. தொடர் போராட்டம் நடத்தியும் திமுக அரசு மின் கட்டணத்தை குறைக்கவில்லை. 

நாடாளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு? கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் பரபரப்பு தகவல்

ஜி.எஸ்.டி. யால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடுமையான மின் கட்டண உயர்வு, வீடுகளுக்கு 55 சதவீத உயர்ந்துள்ளது. தொழில் மின்சார கட்டணமும் உயர்ந்து விட்டது. விடியா திமுக அரசு கவனம் செலுத்தாத காரணத்தால் நூல் விலையும் உயர்ந்து விட்டது. இதற்கும் எமது அதிமுக குரல் கொடுத்து அதை சரி செய்யும். டாலர் சிட்டி டல் சிட்டியாகி விட்டது. தொழில் பெரும் நசிவு அடைந்து உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.

இன்றைக்கு கைத்தறி, விசைத்தறி தொழில் முடங்கி விட்டது. கைத்தறி நெசவாளர்கள் மானியம் கேட்டார்கள். அதிமுக அரசு மானியம் கொடுத்து அந்த தொழிலை பாதுகாத்தது. நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. தொழில் பாதுகாத்தது அதிமுக அரசு. பனியன் நூர்பாலைகள் நசிந்து விட்டது. பனியன் தொழில் முடிந்து விட்டது. மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி விட்டது.

அரிசி, பருப்பு விலை உயர்ந்து விட்டது. எல்லா மளிகை பொருட்களும் 40 சதவீதம் ஏறி விட்டது. தொழிலும் இல்லை வருமானமும் இல்லை. ஆனால் விடிய திமுக அரசின் ஸ்டாலிக்கு மக்களை பற்றி கவலை இல்லை. ஓட்டை சட்டியாக இருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று தனது குடும்பம் வாழ்ந்தால் போதும் என்று ஆட்சி நடத்துகிறார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார். ஸ்டாலினும் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து அந்த பணத்தை பதுக்கி விட்டார்கள் என்று நிதி அமைச்சரே சொல்லி உள்ளார்.

தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்வதாக ஸ்டாலின் சொன்னார். அது முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வெளிநாட்டுக்கு தமிழ்நாட்டு தொழில் அதிபர்களை வரவைத்து ஒப்பந்தம் போடுகிறார்கள். 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்தது அம்மாவின் அரசு. 302 ஒப்பந்தங்கள் போட்டோம். திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வெற்றி கண்டது அதிமுக அரசு.

தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மனு வாங்குவதற்கு ஒரு பெட்டி வைத்தார். ஆட்சிக்கு வந்து விட்ட பின்னர் பெட்டியே காணாமல் போய் விட்டது. மக்களை ஆசையை தூண்டி ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் என்று ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம். பெரிய திருடனை பார்த்து ஸ்டாலின் கேட்கிறார். 656 கோடி தேர்தல் பத்திரமாக திமுகவுக்கு வந்து இருக்கிறது. ஆன்லைன் ரம்மி நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் 550 கோடி கொடுத்தது.

இன்றைக்கு திருப்பூரில் 940 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி உள்ளது.1650 கோடியில் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றி உள்ளது. நாம் தொடங்கிய திட்டம் என்பதால் அதை கிடப்பில் போட்டு உள்ளார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும். திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக. ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வராதது தான் திமுக.

திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாம், மூன்றாம் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக . இப்போது நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக 1050 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக. ஆனால் இவர் பெயர் வைத்து விட்டார். பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைத்து விட்டார்கள். 644 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. 27 கோடியில் வேலம்பாளையம் அரசு சுகாதார நிலையம் கட்டப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் தினசரி மார்க்கெட், சந்தை கட்டப்பட்டு உள்ளது. இப்படி பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது என்றார்.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு 508 பெண்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தினார் . மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.

click me!