
திருவள்ளூர்
கூவம் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை வருவாய்த்துறை, பொதுப் பணித்துறையினர் ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு, கொசஸ்தலை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும்.
பூண்டி ஏரி நிரம்பியதும் சென்னை குடிநீருக்கு வழங்கப்படுவதற்கு மேல் நீர் அதிகமாக இருந்தால், அந்த நீரை கூவம் ஆறு வழியாக கடலுக்கு திருப்பி விடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், திருவள்ளூரை அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள தடுப்பணை கடந்த 2015-ல் பெய்த பலத்த மழையால் முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல கூவம் ஆற்றிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாயும் சேதமடைந்துள்ளது.
தற்போது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடுப்பணையில் ரூ.10 இலட்சம் மதிப்பில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், ஆட்சியர் எ.சுந்தரவல்லி, செய்தியாளர்களிடம், “செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஒரு வாரத்தில் கட்டி முடிக்கப்படும். மேலும், மழைக் காலத்தில் உபரியாக சேரும் நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ல் சேதமடைந்த தடுப்பணையை முழுமையாக சீரமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. எனவே நிதி ஒதுக்கியதும் விரைவில் தடுப்பணை முழு அளவில் சீரமைக்கப்படும்.
அதேபோல், கூவம் ஆற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை வருவாய்த்துறை, பொதுப் பணித்துறையினர் ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.