
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மனு நீதி நாளில், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தம்பதி தம் இரு குழந்தைகளுடன் தீ குளித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திங்கள் கிழமை இன்று மனுநீதி நாளில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் போலீசார் கடும் சோதனை செய்தனர். கையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் பாட்டில்களைக் கூட கொண்டு செல்ல இயலாதபடி கெடுபிடி செய்தனர். மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் 8 வாயில்கள் மூடப் பட்டன. பிரதான 2 வாசல்கள் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார், ஆட்சியர் அலுவகத்திற்கு வரும் பொதுமக்களிடம், மண்ணெண்ணெய் பாட்டில் போன்ற பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா? என சோதனை செய்தனர். தீவிர சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்ற சோதனைகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களிலும் தொடர்கிறது. இதனால், சாதாரணமாக மனு கொடுக்கவும், தங்கள் குறைகளைக் கூறுவதற்கு வரும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். பின் அவர் தீக்குளிப்பில் இருந்து தடுக்கப்பட்டார். திருச்சி மாவட்டத்திலும் மலர்க்கொடி என்ற பெண் ஒருவர் கந்து வட்டி பிரச்னை காரணமாக இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அதுபோல், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.