
சிறிது நேரம் போனால் கலைந்து சென்று விடுவார்கள் என்றும் பிறகு பேசி தீர்த்து கொள்வோம் எனவும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை போரட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. தொழிற்சங்கங்களின் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, பல்லவன் இல்லம் எதிரே போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொழிற்சங்க கொடிகளை உடைத்து எறிந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, பல்லவன் இல்லம் வழியாக வந்த பேருந்துகள் மீது தொழிலாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இடைக்கால நிவாரணமாக ரூ. 1.250 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் அமைதிகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது எனவும் வரும் டிசம்பர் 27, 28 தேதிகளில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறிது நேரம் போனால் கலைந்து சென்று விடுவார்கள் என்றும் பிறகு பேசி தீர்த்து கொள்வோம் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.