
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்த உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பழகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லதுரை, சென்னை பல்கலைக்கழகத்துக்கு துரைசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காலியாக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பணியிடத்துக்கு 3 அல்லது 4 மாதத்தில் தேர்வு குழு நியமனம் செய்யும். துணைவேந்தருக்கான நியமனத்துக்கு, தகுதி உடையவர்களின் கல்வி தகுதி பரிந்துரை செய்யப்படும்.
வரும் காலங்களில் இதுபோல் தாமதம் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கால தாமதம் இல்லாமல், துணை வேந்தர் பதவி நியமனம் செய்யப்படும்.
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக புதிய குழு அமைக்கப்பட்டு, துணை வேந்தர் நியமனம் செய்யப்படுவார்கள். வரும் காலங்களில் பதவி காலம் முடியும் முன்பே, தேர்வு குழு அடுத்த துணை வேந்தரை நியமனம் செய்யும்.
துணை வேந்தர் பதவிக்கு யாருடைய சிபாரிசும் ஏற்கப்படாது. அதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலைகழகத்துக்கு 1.5 வருடத்துக்கு பிறகும் மதுரை பல்கலைகழகத்துக்கு 2 வருடங்களுக்கு பிறகும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.