
போக்குவரத்து தொழிலாளர்களின் 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை இன்று நடந்து வருகிறது. கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கலநந்து கொண்டுள்ளனர்.
பேச்சு வார்த்தைக்கு முன், சிஐடியு தலைவர் அ.சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ரூ.1250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரூ.250 கோடி மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நியாயமான சலுகைகள், ஊதிய உயர்வு மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றுவரை நிறைவேற்றவில்லை.
இதுதொடர்பாக கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைத்துள்ளது. இதில் மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு வழங்குவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
இந்த பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சவுந்தர்ராஜன் கூறினார்.