ஜெயலலிதா சமாதியில் சோகம் - மாரடைப்பால் மாநில நிர்வாகி மரணம்

First Published Dec 17, 2016, 6:44 PM IST
Highlights


முதல்வர் ஜெயலலிதா கடந்த டிச 5 அன்று மரணமடைந்தார் . மறுநாள் அஞ்சலிக்கு பின்னர் எம்ஜிஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் உடலைக்காண லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுதுமிருந்து குவிந்தனர்.

அதன் பின்னர் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காணவும் , போயஸ் இல்லத்தை காணவும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்  வந்தவண்ணம் உள்ளனர். ஜெயலலிதாவின் சமாதியை ஒரு கோவிலாகவே நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

தினந்தோறும் தொண்டர்கள் சமாதிக்கு வந்து வணங்கி வழிப்பட்டு மொட்டை அடித்து கொள்கின்றனர். சில திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து ஆசி பெற்று செல்கின்றனர். கொளத்தூரை சேர்ந்த தொண்டர் ஒருவர் தனது மகன் திருமணத்தை ஜெயலலிதா சமாதியில் நடத்தினார்.

தினந்தோறும் மாவட்ட வாரியாக தொண்டர்கள் , கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா சமாதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதில் சிலர் சமாதிக்கு வந்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுது மயங்கி விழுகின்றனர்.

 இன்று ஜெயலலிதா சமாதியை காண திருச்சியிலிருந்து கட்சிக்காரர்கள் , விவசாய அணி மாநில பொருளாளர் தங்கவேலு தலைமையில் வந்தனர். ஜெயலலிதா சமாதியை பார்த்ததும் சோகமயமான தங்கவேலு சமாதிக்கு செல்ல கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்றுள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனே உடன் வந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு ராயபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சோதித்துவிட்டு  தெரிவித்தனர்.

இதையடுத்து அவருடன் வந்த தொண்டர்கள் சோகத்துடன் அவரது உடலை சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு சென்றனர்.

click me!