
எடப்பாடியை ஒருமையில் விமர்சித்த வீடியோ -ஆதவ் அர்ஜூனா வருத்தம் : திராவிட கட்சிகளுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளார். இந்த நிலையில் விஜய்க்கு பக்கபலமாக இருப்பவர் ஆதவ் அர்ஜூனா, தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டி பரிசுகளை வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்ற ஆதவ் அர்ஜூனா தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் பேசிய வீடியோ தான் வெளியாகியுள்ளது. அதில், ''பாஜகவே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விடும். எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வர தயாராக இல்லை. அண்ணாமலை கூட 10 பேரை கூட வைத்துக்கொண்டு தேர்தலில் நின்று 18% ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை'' என்று எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசினார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதவ் அர்ஜூன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில்,
அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு என ஆதவ் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.