
திருநெல்வேலி
கந்துவட்டி பிரச்சனை திரையுலகத்தில்தான் அதிகளவு இருக்கிறது என்று திருநெல்வேலியில் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்தில் நேற்று காலை நடைப்பெற்றது.
இந்தப் படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "நடிகர் சங்கத்திற்கு ரூ.30 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டிட பணிகள் முடிவடையும்.
நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட ஏற்கனவே சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வருகிற ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட 250 நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள். அதாவது கடந்த 1970–ஆம் ஆண்டு முதல் இதுவரை நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்வர்.
கந்து வட்டி பிரச்சனையால் அசோக்குமார் தற்கொலை செய்துள்ளார். அவரை எந்த அளவுக்கு கொடுமைபடுத்தி இருந்தால் இந்த முடிவுக்கு அவர் வந்திருப்பார். அவரது தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கந்து வட்டியை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து தொழில்களிலும் கந்து வட்டி பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக திரையுலகத்தில் அதிக அளவு இருக்கிறது. குறைந்த பட்சம் மூன்று பேருக்காவது கடுமையான தண்டனை கொடுத்தால், கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பயப்படுவார்கள்.
அன்புசெழியனை பிடிக்க காவலாளர்கள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரை நாங்கள் சந்திப்போம்" என்று அவர் கூறினார்.