மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA சட்டம் ஏற்கத்தக்கது அல்ல எனவும்,அதனை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சிஏஏ எதிராக களம் இறங்கிய விஜய்
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க அனுமதி இல்லையென இந்த சட்டம் கூறுகிறது.
பிளவுவாத அரசியலை முன்னிறுத்துவதா.?
இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிக்கையில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டிருந்தார்.
போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் தவெக
இந்தநிலையில், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இந்த சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கோவைத் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் "பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) ஏற்கத்தக்கது அல்ல" "Withdraw CAA" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை தேமுதிக ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.. பாஜகவிற்கு எதிராக பிரேமலதா அதிரடி