
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை சமீபத்தில் கோவை அருகே உள்ள காளப்பட்டி பகுதியில் பல கோடிகள் மதிப்புள்ள 11 ஏக்கர் நிலம் வாங்கியதாக சர்ச்சை எழுந்தது. கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி அன்று அண்ணாமலை தனது மனைவி அகிலாவுக்கு அளித்த அதிகாரப் பத்திரத்தின் அடிப்படையில், கோவை காளப்பட்டியில் உள்ள சுமார் 12-14 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார்.
இந்த நிலத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு (கைட்லைன் வேல்யூ) சுமார் 45 லட்சம் ரூபாயாக இருந்தது, ஆனால் சந்தை மதிப்பு பல கோடிகளாகக் கணிக்கப்படுகிறது. பதிவு செலவுகளாகவும் ஸ்டாம்ப் டியூட்டியாகவும் 40.59 லட்சம் ரூபாய்கள் செலுத்தப்பட்டன என்று தகவல் வெளியாகி இருந்தன. அண்ணாமலை வாங்கிய நிலத்திற்கான ஆவணங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகின. பாஜகவில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பல கோடிகள் மதிப்பிலான நிலத்தை வாங்கியது எப்படி? என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இது குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, ''கடந்த ஜூலை 12, 2025 அன்று, விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக, எனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். எனது மனைவி திருமதி அகிலா அவர்களுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்
இந்நிலையில், சமூக ஆர்வலர் கோ. தேவராஜன் என்பவர் அண்ணாமலை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தேவராஜன் அளித்த புகாரில், அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும், சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்யவும், அண்ணாமலை மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.