தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் 3 ம் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோர பகுதியில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை
வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழையானது வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் தற்போது அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தெற்கு அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதால் இன்று 11.30 மணி வரை கேரள அரபி கடலில் 0.5 முதல் 1.3 மீட்டர் உயர அலைகள் மற்றும் சூறை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி வரை 0.6 முதல் 1.8 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும், எனவே மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அலையின் சீற்றம் அதிகரிக்கும்
கடல் சீற்றம் வலுப்பெறக் கூடும் என்பதால், மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் கன்னியாகுமரி கடற்கரையில் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், தென் அரபிக்கடலில் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். ஜனவரி 2ம் தேதி முதல் 3ம் தேதி வரை கன்னியாகுமரி கடற்கரையில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்