
சுற்றுலா தேசத்தின் பாதைகள் சுடுகாட்டை நோக்கி நகர்வதென்பது துரதிர்ஷ்டத்தின் உச்சம். கோத்தகிரி சாலையில் விபத்தால் கொல்லப்பட்ட நான்கு பேரின் ஆன்மாக்களும் அதலபள்ளத்தாக்கிலிருந்து அழும் குரல் தேயிலை தோட்டமெங்கும் தேம்பித்தேம்பி எதிரொலிக்கிறது...
வேலூர் மாவட்டம் கோட்டப்பாளையத்தை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சுமார் இருபத்தியேழு பேர் ஒரு டெம்போ டிராவலரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். தாவரவியல் பூங்கா, படகு இல்லம் என பசேல் ஏரியாக்களை விழிகள் விரிய பார்த்துவிட்டு வெயில் தேசமான வேலூர் நோக்கி கிளம்பியிருக்கிறார்கள்.
26_ம் தேதி இரவு பத்து மணியளவில் கோத்தகிரியிலிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த டெம்போ டிராவலர், முள்ளூருக்கு ஒரு கிலோமீட்டர் முன்பாக வந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த குறுகிய மலைச்சாலையில் தறிகெட்டு ஓடியிருக்கிறது.
ஒரு நிலையில் சாலையோரமிருக்கும் சிறிய தட்டுப்பு சுவரில் இடித்து பள்ளத்தாக்கில் கவிழும் வகையில் தொங்கியிருக்கிறது. அந்த மை இருட்டிலும் பாதாளத்தின் அகோர வாய் இந்த வேனை இழுத்து விழுங்க வாய்திறந்து தவித்துக் கொண்டிருந்தது.
தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் டெம்போ டிராவலர் பள்ளத்தாக்கை நோக்கி சரிந்து கொண்டிருக்க, உள்ளே இருந்தவர்கள் தலைகீழாக தொங்கியவாறு உதவிக்குரல் எழுப்பினர். அக்கம்பக்கத்து மனிதர்கள் வந்து பலரை காப்பாற்றிவிட்டனர். ஆனால் சிலரோ மலைச்சரிவில் விழுந்துவிட்டனர்.
தகவல் தீயாய் பரவி, பாய்ந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு பாதாளத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். ஆனாலும் கூட பலியின் எண்ணிக்கை நான்கை தொட்டது.
கோத்தகிரியின் இந்த மலைப்பாதை அழகில் மட்டுமல்ல ஆபத்திலும் உச்சம். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே ஏறுகையில் வலது புறத்தில் மலைச்சரிவு தொட்டுவிட்டு தொடரும்.
ஆனால் முள்ளூர் தாண்டிவிட்டால் கோத்தகிரி வரை வலது புறத்தில் பெரும் பள்ளத்தாக்குகள் பேயாய் தொடரும். பச்சையை கரைத்து ஊற்றினார்போல் இருக்கும் இந்தப் பகுதிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் கூட கவனம் சிறிது பிசகினாலும் கண்ணம்மா பேட்டையில் அட்மிஷன் ஆர்டர் கிடைத்துவிடும்.
மிக கவனமாக இந்த குறுகிய சாலையில் செல்ல வேண்டும்.இப்போது நடந்த விபத்துக்கான காரணமாக மலைப்பாதையில் வாகனத்தை ஓட்டுவதில் அனுபவமற்ற டிரைவர் ஓட்டி வந்ததால் இது ஏற்பட்டிருக்கலாம் அல்லது தூக்க கலக்கம் அவரை அசத்தியதால் டெம்போ டிராவலர் இந்த கோரத்தை அழைத்து வந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
காரியம் முடிந்த பிறகு காரணத்தை பேசி பெரிய பிரயோசனம் ஏதுமில்லை ஆனால் மலைப்பாதையில் வாகனத்தை இயக்க வருபவர்கள் இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வது நல்லது. தவணை முறையில் காரும், காசு கொடுத்தால் லைசென்ஸும் கிடைக்கிறது என்பதற்காக ஆளுக்கொரு கார் வாங்கிக் கொண்டு மலைக்கு கிளம்பினால் இப்படித்தான் மல்லாக்க விழுந்து மரணம் சம்பவிக்கும்.
மலைப்பாதையில் காரை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் பல நியதிகள் இருக்கிறது. இது மலையேறும் எத்தனை பேருக்கு தெரியும்? மேலே ஏறி வரும் வாகனங்களுக்கு முன்னுரிமையாக வழி கொடுக்க வேண்டும், வளைவுகளில் முந்தவே கூடாது, ஆன் தி வேயில் நின்று வன விலங்குகளுக்கு மிக்சர், பொரியெல்லாம் கொடுக்க கூடாது, கீழே இறங்குகையில் முடிந்தளவுக்கு ஆக்ஸிலேட்டரை மிதிக்காமல் இருக்க வேண்டும், இரண்டு அல்லது மூன்றாவது கியரில் இறங்குவது உத்தமம், பிரேக்கை அழுத்தி பிடித்துக் கொண்டே வந்தால் ஒரு கட்டட்தில் பிரேக் டிரம் பழுத்து வெடித்துவிடும்...என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
இனியாவது தெரிந்து கொண்டு கொண்டை ஊசி வளைவுகளை அணுகுங்கள். தூங்காமல் ஓட்டுவது ஒன்றும் சாகசமல்ல.
மலை பாதை விதிகளை நாம் மதிக்காவிட்டால் மரணத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்கிறோம் என்று அர்த்தம்.
ஸ்டியரிங்கை பிடிக்கும் முன் சிந்திங்க பாஸ்!