
சென்னை, பட்டினப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் தனியார் ஐடி நிறுவன கார் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்களில் சிலர் காயமடைந்துள்ளனர்.
கேளம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்து ஒன்று பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து மிக வேகமாக செலுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. கார் மீது மோதிய பேருந்து சாலையோரத்தல் இருந்த தனியார் காம்பவுண்டு சுவரை இடித்து, தோட்டத்துக்குள் நுழைந்தது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மணி என்பவருக்கு காலில் பலமாக அடிபட்டது. பேருந்து பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து ஓட்டுநர் பேருந்தைவிட்டு ஒடிவிட்டார். இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து, அருகில் இருந்தோர் போக்குவரத்து துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் வேறொரு ஓட்டுநரைக் கொண்டு பேருந்தை சம்பவ இடத்தில் இருந்து அகற்றினர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.