பயிர்க்காப்பீட்டு தொகையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு; வங்கிக்கு பூட்டுப் போட்ட விவசாயிகள்...

First Published Feb 12, 2018, 10:50 AM IST
Highlights
abuse in corp insurance amount Farmers locked the bank ...


திருவாரூர்

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததால் தில்லைவிளாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு விவசாயிகள் பூட்டு போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பயனாளிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கூட்டுறவு வங்கியின் செயலாளர் பன்னீர்செல்வம் கூட்டுறவு வங்கியை திறந்தார்.

அப்போது, அங்கு விவசாயிகள் அர்ச்சுனன், மதியழகன், ஐயப்பன், கணேசன், ராஜா, மற்றொரு ஐயப்பன், ராஜாத்தி ஆகியோர் வந்தனர். அவர்கள் செயலாளர் பன்னீர்செல்வத்திடம் சென்று, "பயிர்க்காப்பீட்டு தொகையில் ஏக்கர் ஒன்றுக்கு 20 சதவீதம் என்றும், பின்னர் 13 சதவீதம் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது எந்தவிதத்தில் நியாயம்?

இதன் மூலம் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து வருகிறது. முறையாக கொடுங்கள் இல்லை நிறுத்திவிட்டு வங்கியை பூட்டிவிட்டு செல்லுங்கள்" என்று கூறியுள்ளனர்.

ஆனால், விவசாயிகளுக்கு, செயலாளர் பன்னீர்செல்வம் சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்க்காப்பீட்டு தொகையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து வருவதற்கு முறையாக பதில் கொடுக்காததால் விவசாயிகள் வங்கியை பூட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!