ஐஸ்கிரீம் விலை ஏற்றம் குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே, ஐஸ்கிரீம்களின் விலையை ரூ.2 முதல் ரூ.5 வரை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20இல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28இல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
100 எம்.எல். எடை கொண்ட கிளாசிக் கோன் வெண்ணிலா ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும், 100 எம்.எல். எடைகொண்ட கிளாசிக் கோன் சாக்லேட் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
undefined
இந்த நிலையில், ஐஸ்கிரீம் விலை ஏற்றம் குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்கள் தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்கள் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும்.
அனைவரும் எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.