
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த உடன் தவெக தலைவர் விஜய் உடனே சென்னைக்கு சென்றதும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக தலைவர்கள் களத்துக்கு வராமல் தலைமறைவானதும் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
இதன்பிறகு தவெக தலைவர்கள் ஒவ்வொருவராக வெளிவரத் தொடங்கினார்கள். கரூர் சம்பவம் குறித்து விஜய் வீடியோ வெளியிட்டார். இதன்பின்பு வீட்டை விட்டு வெளியே வந்த ஆதவ் அர்ஜுனா, தான் பேசுகிற மனநிலையில் இல்லை எனவும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா போட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராக அவர் பதிவு போட்டதால் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்தும் கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, ''என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் எதிர்வினை
அதாவது அவர் அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க டெல்லி செல்ல உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கரூரில் 41 பேர் உயிரிழக்க முக்கிய காரணமே தவெக தான். ஏற்கெனவே தவெக கரூர் மக்களுடன் நிற்கவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க ஆதவ் அர்ஜுனா டெல்லி செல்வதாக கூறப்படுவது கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செல்வது ஏன்?
அதே வேளையில் ஆதவ் அர்ஜுனா அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டி காரணமாகத்தான் டெல்லி செல்கிறாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் கரூர் சம்பவத்தில் மத்தியில் ஆளும் பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்கிறது. பாஜக அமைத்த உண்மை கண்டறியும் குழுவினரும் கரூர் வந்து விசாரணை நடத்தி திமுக அரசு மீது தான் குற்றம்சாட்டினார்கள்.
இந்த காரணமாக இருக்குமோ..
இதனால் பாஜக விஜய்யை மிரட்டி, அவரை திமுகவுக்கு எதிராக பேச வைப்பதாகவும், கரூர் விவகரத்தில் பாஜக சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளதாகவும் திருமாவளவன், செல்வபெருந்தகை ஆகியோர் தெரிவித்தனர். ஆகையால் ஆதவ் அர்ஜுனா டெல்லி செல்வது மேற்கண்ட காரணம் தானா? இல்லை கரூர் சம்பவம் தொடர்பாக தங்கள் கட்சியையும், விஜய்யையும் காப்பாற்ற பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.