
ஆதார், சாதாரண மனிதனின் ஆதாரம் என்று அரசு அறிவித்து, அனைத்து மக்களுக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டையை அளித்து வருகிறது. இந்த ஆதார் அட்டையே, அனைத்துக்குமான ஒற்றை அடையாள அட்டையாக திகழ்கிறது. வங்கிக் கணக்கு முதல், அரசின் நலத்திட்டங்கள் என அனைத்துக்கும் ஆதாரே ஆதாரம்.
இதனால் ஆதார் அட்டையைப் பெறுவதில் அனைவரும் ஆர்வம் காட்டினர். பெரும்பாலானோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் பலர் ஆதார் அட்டை பெறாமல் உள்ளனர். அவர்கள் இதற்காக பெரும் கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் எளிமையாக அணுகக் கூடிய போஸ்ட் ஆபீஸ்களிலேயே ஆதார் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!
அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை தலைமை அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய தபால் நிலையங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,434 அஞ்சல் நிலையங்களில் படிப்படியாக ஆதார் சேவை அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, அஞ்சலகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஆதார் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.