ஆற்காடு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றபோது இந்த சமபவம் நிகழ்ந்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெண்கள் சாரை, சாரையாக சென்று வருகின்றனர. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து 2 வேன் மற்றும் ஒரு தனியார் பேருந்தில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
undefined
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி என்ற இடத்தில் டீ குடிப்பதற்காக வேன்களும், பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அப்போது அங்கு தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி பேருந்தின் மேல் தளத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. அந்த வேளையில் டீ குடிப்பதற்காக பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அகல்யா (20) என்ற இளம்பெண் பேருந்து படிக்கட்டு கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்து பலி
அவர் மீது மின்சாரம் பாய்வதை பார்த்து அதிர்ந்த மற்ற பக்தர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்காமல் உள்ளேயே இருந்துள்ளனர். ஆனாலும் மேலும் இருவருக்கு மின்சாரம் பாயந்து அவர்களுக்கு நல்லவேளையாக ஏதும் ஆகவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி பேருந்தை பறிமுதல் செய்தனர்.
உயிரிழந்த அகல்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. 10ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் விவசாய பணிகளை பார்த்து வந்த நிலையில், இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரியத் துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினார்கள்.
தாழ்வாக சென்ற மின்கம்பி
விபத்து நடந்தது எப்படி? மின்கம்பி எந்த அளவுக்கு தாழ்வாக சென்றது? என்பது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். தொடர்ந்து தாழ்வாக சென்ற மின்கம்பியை சரி செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இதேபோல் தாழ்வாக இருக்கும் மின்கம்பிகளை சரி செய்து இனிமேல் இதுபோல் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.