
சென்னை, ஓ.எம்.ஆர். சாலையில், போலீசார் விரட்டிச் சென்றதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். இளைஞரின் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் எனக் கூறி அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில், சமீபத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது, காரில் வந்த இளைஞர் மணிகண்டன் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்தனர். இது குறித்து மணிகண்டனுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார், மணிகண்டனை ஆபாசமான வார்த்தைகளைக் கூறி
திட்டியுள்ளனர்.
போலீசாரின் பேச்சார் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், காரில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள், மணிகண்டன் மீது தீயை ஊற்றி அணைத்தனர். மேலும் அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் அராஜக போக்கைக் கண்டித்து அப்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டன் சாவுக்கு காரணமாக நான்கு போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஒருவரை கமிஷனர் விஸ்வநாதன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். மேலும், விரட்டிச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளையும் விதித்திருந்தார்.
மணிகண்டன் உயிரிழப்புக்கு போலீசாரின் அராஜக செயலே என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் போலீசாரின் அடாவடியால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் நடந்துள்ளது.
அந்த இளைஞர் இன்று இரு சக்கர வாகனத்தில் ஓ.எம்.ஆர். சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் விரட்டிச் சென்றுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உள்ளார். ஆனால், இரு சக்கர வாகனம், லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட அந்த இளைஞரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, போலீசாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
போலீசாரின் அராஜகப்போக்கால், மணிகண்டன் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசா விரட்டிச் சென்றதால் இன்று மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.