
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் முள்ளம்பன்றிக்கு ஆசைப்பட்டு அதனை வேட்டையாடி சாப்பிட்ட புலியின் குடலை முள்ளம்பன்றியின் முட்கள் கிழித்ததால் புலி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையை ஓட்டியுள்ளது காயல்கரை வனப்பகுதி. இதன் அருகே மக்கள் குடியிருப்புகளும் உள்ளன. நேற்று காலை காயல்கரை பகுதிக்குச் சென்ற சிலர் அங்கு புலி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
இதுகுறித்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் சுற்றி இருக்கும் மக்கள் அனைவரும் இறந்து கிடந்த புலியை காண ஓடி வந்தனர்.
இதுபற்றிய தகவலறிந்த வன அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து, புலியின் உடலை சோதித்தனர். பின்னர், புலி இறந்துகிடந்த பகுதியிலேயே அதன் உடல் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியது:
“இறந்து கிடந்தது பெண் புலிக்கு 4 வயது இருக்கும். இரவு நேரத்தில் அணைப்பகுதிக்கு இரை தேடி அந்த புலி வந்திருக்கலாம். அப்போது, அங்கு சுற்றித் திரிந்த முள்ளம்பன்றியை வேட்டையாடிக் கொன்றுள்ளது.
முள்ளம் பன்றியின் கூர்மையான முட்கள் குத்தியதில் புலியின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும், முள்ளம் பன்றியை தின்றதால், புலியின் வயிற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு முட்கள் புலியின் குடலையும் கிழித்துள்ளன.
இதனால் உயிருக்குப் போராடி அந்த புலி விழுந்து இறந்துள்ளது” என்று அவர்கள் கூறினர்.