
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை சேர்ந்த, சக்தி எனும் சிறுவன் உலக அமைதிக்கான சர்வதேச விருதினை வென்றிருக்கிறார். நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இந்த சிறுவன், இந்த விருதினை பெற காரணமான செயலை கேட்டால் அசந்துடுவீங்க.
இந்தியா என்ன தான் பல வகையில் முன்னேறிக் கொண்டிருந்தாலும், பள்ளிக்கூட வாசலை கூட பார்க்காத குழந்தைகளும், நம் சமுதாயத்தில் இருந்து வருகின்றனர். என்பதே ஒரு கசப்பான உண்மை.
ஆரணியை தொடர்ந்து உள்ள பையூர் எனும் ஊராட்சியில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
பாசி மணிகளை விற்பனை செய்வது, சிறு விலங்குகளை வேட்டையாடுவது, இது தான் அவர்களின் அன்றாடப்பணி. அப்படி ஒரு இடத்திலிருந்து வந்த சிறுவன் சக்தி, பூங்காவனம் பகுதியில் இயங்கி வரும் சிறப்பு தங்கும் விடுதியில் சேர்ந்து கல்வி கற்று வந்தார்.
தான் கல்வி கற்று முன்னேறியதோடு நில்லாமல், தங்கள் இனத்தை சேர்ந்த குழந்தைகளிடமும், கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசி, அவர்களையும் பள்ளியில் சேர்க்க தன்னாலான முயற்சியை செய்திருக்கிறார் சக்தி.
இதனால் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 25 மாணவர்கள், கூடுதலாக அந்த விடுதியில் சேர்ந்து கல்வி பெற துவங்கியிருக்கின்றனர். இந்த சிறு வயதில் பொறுப்புடன் செயல்பட்டு இவர் செய்திருக்கும் இந்த சேவைக்காக, சக்திக்கு உலக அமைதிக்கான சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. இந்த சாதனைக்காகவும், சேவைக்காகவும், சக்தியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.