கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 36பேர் உயிரிழந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இன்றைய முதல் நாள் கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபை முதல் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம், நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகிய பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், தமிழக அரசின் துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை தொடங்கியது.
முதல் நாளான இன்று, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், இந்திரகுமாரி, மறைந்த எம்எல்ஏ புகழேந்தி உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, குவைத் நாட்டின் மங்கப் பகுதியில் 7 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
கள்ளச்சாராய உயிரிழப்பு
மேலும் கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்தவர்கள் 36 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கும் தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக சபாநாயகர் பேசுகையில், “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், விஷச் சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார் என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
சட்டசபை ஒத்திவைப்பு
தொடர்ந்து மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 10மணிக்கு சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் பற்றி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.