
கடலூர்
விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநராக சேர்ந்த மளிகை கடைக்காரர் ஓட்டிச்சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்தது. தற்காலிக ஓட்டுநர்களால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
உரிய பயிற்சி இல்லாத தற்காலிக ஓட்டுநரைகளைக் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை 2-ல் இருந்து பேருந்து ஒன்று, பேருந்து நிலையம் நோக்கிப் புறப்பட்டது. அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்த மளிகைக் கடைக்காரர் பாரதி என்பவர் ஓட்டினார்.
இந்த நிலையில், அந்த பேருந்து சிறிது தூரம் சென்றதும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி பணிமனை அருகே உள்ள சாலையோர வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் தற்காலிக ஓட்டுநர் பாரதி காயமின்றி உயிர் தப்பினார்.
"உரிய பயிற்சி இல்லாமல் பேருந்து ஓட்டியதால்தான், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி உரிய பயிற்சி இல்லாத ஓட்டுநர்களைக் கொண்டு அரசு பேருந்தை இயக்க கூடாது" என்று மக்கள் வேண்டிக் கொண்டனர்.
மேலும், தற்போது இந்த பேருந்து வாய்க்காலுக்குள் பாயாமல் ஊருக்குள் சென்றிருந்தால் பெரிய அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் தொற்றி கொண்டது.
விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகள் தொடர் கதையாகி வருவதால் பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.