
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 13 பொது மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 22 வயதே ஆன இளைஞர் ஒருவருக்கு காலில் குண்டடி பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, காலில் ஏற்பட்டிருந்த துப்பாக்கி காயத்தின் தீவிரம் காரணமாக, அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டிருக்கிறது. கலவரத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டின் போது சுவர் ஏறிக்குதித்து, தப்பிக்க முயன்ற போது இவரின் காலில் குண்டு பாய்ந்திருக்கிறது.
இது குறித்து அவரது தந்தை பத்திரிக்கையாளர்களிடம் கூறியபோது, என் மகன் இரண்டாவது ஷிஃப்ட் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு நடந்த கலவரத்தை பார்த்து தப்பிக்க முயன்ற போது, அவனுக்கு இந்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவன் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவும் இல்லை. வன்முறையில் ஈடுபடவும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட வாலிபரின் குடும்பத்தாரை சந்தித்து பேசிய சந்தீப் நந்தூரி அவருக்கு கண்டிப்பாக அரசு வேலை அமைத்து தரப்படும் என உறுதியளித்திருக்கிறார்.