
வேலூர்
ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேசன் அரிசியை வேலூரில் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளை பார்த்ததும் மினிலாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
வேலூர் மாவட்டம், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய்த் துறையினர், கனிமவளத் துறையினர் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மணல் கடத்துவதை தடுக்க சென்னை - பெங்களூரு சாலையில் வாலாஜா அடுத்த வாணியன்சத்திரம் பகுதியில் நேற்று காலை இந்த வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில், மினி லாரியில் 50 கிலோ எடையில் 200 மூட்டைகளில் சுமார் 10 டன் ரேசன் அரிசி இருப்பதும், ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
அதிகாரிகளை பார்த்ததும் மினி லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து அதிகாரிகள் ரேசன் அரிசியுடன் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.