பூஜை செய்தால் ஆரோக்கியம் பெறுவீர்கள் என்று கூறி பாட்டியிடம் 5 சவரன் நகை கொள்ளை; மந்திரவாதிக்கு வலைவீச்சு...

First Published May 30, 2018, 9:22 AM IST
Highlights
5 pound jewelry robbery with grandmother saying that will get health doing pooja


திருவண்ணாமலை 

பூஜை செய்தால் உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள் என்று கூறி பாட்டியிடம் ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மந்திரவாதியை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள இலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பட்டம்மாள் (65). இவர்களுடைய மகன் சிவகுமார். 

பட்டம்மாள் நீண்ட நாட்களாக இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பட்டம்மாள் தனியாக வீட்டில் இருந்தார். 

அப்போது, அங்கு வந்த ஒருவர் தன்னை மந்திரவாதி என்றும், உங்களுக்கு உடலில் வலிகள் இருப்பது குறித்து தகவல் அறிந்து இங்கு வந்தேன். பரிகார பூஜைகள் செய்தால் வலி நிவாரணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய பட்டம்மாள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அந்த நபர் பட்டம்மாளிடம் ஒரு சொம்பு கொண்டு வரச்சொல்லி அதில் நீர் நிரப்பும்படி கூறியுள்ளார். 

அதில் நீர் நிரப்பியவுடன் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடலில் நகைகள் இருக்கக் கூடாது. எனவே, நகைகளை கழற்றி இந்த சொம்புக்குள் போட்டு விடுங்கள் என கூறியுள்ளார். 

பட்டம்மாளும் தான் அணிந்திருந்த இரண்டு சவரன் சங்கிலி மற்றும் மூன்று சவரன் சங்கிலி என மொத்தம் ஐந்து சவரன் சங்கிலிகளை கழற்றி சொம்புக்குள் போட்டுள்ளார். சில நிமிடங்கள் அந்த நபர் பூஜைகள் செய்த பின்னர் குளியலறை சென்று கை, கால்களை கழுவிக் கொண்டு வாருங்கள் என பட்டம்மாளிடம் கூறினார். 

இதனையடுத்து பட்டம்மாள் பூஜை அறையைவிட்டு வெளியே சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் ஐந்து சவரன் நகைகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். 

அதன்பின்னர் பூஜை அறைக்கு வந்த பட்டம்மாள் அங்கு இருந்த நபரும், சொம்புக்குள் இருந்த நகைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி சென்று அவரிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறி நகையுடன் மர்ம நபர் ஓடி விட்டதையும் கூறினார். 

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் மற்றும் காவலாளர்கள் பட்டம்மாள் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

பூஜை செய்வதாக கூறி பாட்டியிடம் ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!