மட்டன் பிரியாணி முதல் இறால் வடை வரை.! மெரினாவில் உணவுத்திருவிழா- தேதி குறித்த தமிழக அரசு

By Ajmal Khan  |  First Published Dec 19, 2024, 8:43 AM IST

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா 20.12.2024 முதல் 24.12.2024 வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் மற்றும் தயார் நிலை உணவுப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.


சென்னையில் உணவு திருவிழா

சுவை சுவையான உணவை தேடி பல்வேறு இடங்களுக்கு மக்கள் ஓடும் நிலையில் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட உணவுகள் கிடைத்தால் கேட்கவா வேண்டும். அதுவும் ஒவ்வொரு ஊரின் பெயரை சொல்லும் இனிப்புகளும், கார வகைகளும் இடம்பெறவுள்ளது. அந்த வகையில் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான உணவுகள். முன்னணி உணவகங்களின் உணவு வகைகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் அவற்றிற்கு இணையாக சுவையும், தரமும் நிறைந்த உணவுகள் கொண்ட உணவு திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா. 20.12.2024 முதல் 24.12.2024 வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கவுள்ளார். 

என்ன என்ன உணவுகள்.?

உணவுத் திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமல்லாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி. கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி. சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை,

 மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை நாகப்பட்டிணம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற (Ready to Eat) உணவு வகைகளான அரியலூர் வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை சென்னை வேர்க்கடலை நெய் லட்டு, கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பீட்ரூட் மால்ட் பொடி, கடலூர் சங்குப்பூ சர்பத், தருமபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, காஞ்சிபுரம் முட்டை மிட்டாய், சேலம் ஆட்டையாம்பட்டி முறுக்கு, கரூர் பாசிப்பருப்பு உருண்டை. கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, மதுரை தொத்தல், நாகப்பட்டிணம் சுண்டைக்காய் வத்தல், நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி, இராமநாதபுரம் லோத்தல், தென்காசி தேன் நெல்லி, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டி, திருச்சி மணப்பாறை முறுக்கு. திருவண்ணாமலை சிமிலி உள்ளிட்ட 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை,

உணவு திருவிழா-அனுமதி இலவசம்

உணவுத் தரச் சான்றிதழ் (FSSAI) பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படம் ஏதுமின்றியும் தயாரித்து, தகுந்த முறையில் கட்டுமானம் (Packaging) செய்து விற்பனை செய்திட 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. துவக்க நாளான 20.12.2024 அன்று மட்டும் மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 மணி நடைபெறும் உணவுத் திருவிழா. 21.12.2024 முதல் 24.12.2024 வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைபெறும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையிலும், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பொதுமக்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவிற்கு வருகை தந்து, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சத்தான, சுவையான, ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்திடவும், வாங்கிச் சென்றிடவும் அன்புடன் அழைக்கிறோம்.

உணவுத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம் எனவும்,  வருகை தரும் பொதுமக்கள், லேடி விலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!