
கடையநல்லூர்,
கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது பாருக் (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகள் ஜாகிதா (8). அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 3–ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக ஜாகிதாவுக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்து வந்தது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் ஜாகிதாவுக்கு காய்ச்சல் அதிகமானது. உடனே அவளை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி ஜாகிதா பரிதாபமாக உயிரிழந்தாள்.
கடந்த சில நாள்களாக கடையநல்லூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஜாகிதா பலியாகி இருக்கலாம என தெரிகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.