75 ஆண்டுகால பழமையான பள்ளி விற்பனை; எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்...

First Published May 14, 2018, 9:36 AM IST
Highlights
75 years old school for sale Villagers protested


நாகப்பட்டினம் 

நாகப்பட்டினத்தில், 75 ஆண்டுகால பழமையான பள்ளியை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி கீழவீதியில் கடந்த 75 ஆண்டுகளாக அம்பிகை விலாஸ் என்ற அரசு உதவிபெறும் சபாநாயக முதலியார் இந்து தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 

இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியரும், மூன்று ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்தாண்டு வரை இந்த பள்ளியில் சுமார் 75 மாணவர்கள் படித்தனர். 

இந்த பள்ளி நிர்வாகத்தினர் தற்போது பள்ளியை மூடி விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி முன் வீடு விற்பனைக்கு என போர்டு வைக்கப்பட்டதால் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் நேற்று தொடக்கப்பள்ளி முன்பு திரண்டு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, "சீர்காழி நகரில் பழமையான அம்பிகை விலாஸ் என்ற பெயரில் இயங்கி வரும் சபாநாயக முதலியார் இந்து தொடக்கப்பள்ளியை விற்பனை செய்யக்கூடாது, 

மாணவர்களின் நலன் கருதி பள்ளியை அதே இடத்தில் தொடர்ந்து இயக்க வேண்டும்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக் கூடாது" என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் பந்தல்முத்து, குமார், உத்திராபொன்னழகன், குருசாமி, பரணிதரன், பந்தல்சரவணன், 

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கம் மாநில பொது செயலாளர் சுரேஷ், செயலாளர் ஜெயவேல், நகர தலைவர் கனிவண்ணன், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

click me!