
முக்கடல் அணையில் ஒரு மாதத்துக்கு உரிய தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பேச்சிப்பாறை–பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைவதால் விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை திகழ்கிறது. இந்த அணையின் தண்ணீர் முழுக்க முழுக்க குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணையின் நீராதாரம் மழை மட்டுமே. இந்த அணையின் மொத்த கொள்ளளவு பிளஸ் அளவில் 25 அடியாகும். மைனஸ் அளவில் 20 அடி வரையிலும் தண்ணீர் எடுக்கலாம். அணையின் அடிப்பகுதியில் சேறும், சகதியும் அதிகமாக இருப்பதால் மைனஸ் 10 அடி வரை மட்டுமே தற்போது தண்ணீர் எடுக்க முடியும். அதற்கு மேல் எடுத்தால் தண்ணீர் கலங்கலாக இருக்கும்.
பொதுவாக கோடை காலங்களில் இந்த அணை வறண்டு விடும். ஜூன் மாதத்துக்குப் பிறகு பெய்யும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவமழைகளின்போது அணை நிரம்பி விடும். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. அதன் பிறகு அணை தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக வறண்டு போவதால் 4 நாட்களுக்கு ஒருமுறை நகர மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிதண்ணீர் கோடை காலங்களில் 10 நாட்கள் அல்லது 12 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் அணை நிரம்பவில்லை. மேலும் தற்போது குமரி மாவட்டத்தில் கோடை வெயிலைக்காட்டிலும் அதிகமான வெயில் காணப்படுவதாலும், வடகிழக்குப் பருவமழை தொடங்க வேண்டிய இந்த நேரத்தில் அதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பதும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது. அதற்கு காரணம் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது தான்.
நாகர்கோவில் நகராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி வழியோரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவைவை பூர்த்தி செய்து வரும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி வெறும் 4 அடியாக இருந்தது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் சிறிதளவை முக்கடல் அணைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் தான் அணையின் நீர்மட்டம் 0.10 அடி குறைந்து வருகிறது. இல்லையென்றால் நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் குறையும். அப்படிப்பார்த்தால் தற்போது இருக்கிற தண்ணீர் 15 அல்லது 20 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். பேச்சிப்பாறை–பெருஞ்சாணி அணைத்தண்ணீரை எடுத்து வருவதால் இருக்கிற தண்ணீரைக் கொண்டு ஒரு மாதம் வரை சமாளிக்கலாம் என்று நகராட்சி அதிகாரிகளால் கூறப்படுகிறது.
தண்ணீர் வெகுவாக குறைந்து வருவதின் காரணமாகவும், ஒரு மாதத்துக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருப்பதின் காரணமாகவும் நாகர்கோவில் நகரில் 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர், தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை என வினியோகம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக நாகர்கோவில் நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார், “நாகர்கோவில் நகராட்சி பகுதியில் மட்டும் வீடுகள் மற்றும் வணிக ரீதியான குடிநீர் இணைப்புகள் மொத்தம் 28 ஆயிரம் உள்ளன. ஒரு நபருக்கு 93 லிட்டர் குடிநீர் வீதம் ஒரு நாளுக்கு நாகர்கோவில் நகரப்பகுதிக்கு 230 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டி உள்ளது. தற்போது அணையில் தண்ணீர் இருப்பு குறைவின் காரணமாக 180 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்க முடிகிறது. இதனால் ஒரு நபருக்கு 81 லிட்டர் குடிநீர் என்ற அடிப்படையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் 5 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது.
இருக்கிற தண்ணீரை வைத்து ஒரு மாதம் மட்டுமே சமாளிக்க முடியும். அக்டோபர் 20–ந் தேதி வழக்கமாக வடகிழக்குப்பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அதைவிட ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தால் கூறப்பட்டது. ஆனால் இதுவரை மழை பெய்ய தொடங்கவில்லை. மழை பெய்தால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும்” என்று கூறினார்.
இதேபோல் கடுமையான வெயில், மழை பெய்யாததின் காரணமாக குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டமும் மளமளவென சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 16.10 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 10.35 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்–1 அணை நீர்மட்டம் 5.84 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 5.93 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை நீர்மட்டம் 11.50 அடியாகவும், 54 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 44.78 அடியாகவும் உள்ளன.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது கும்பப்பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதும், வடகிழக்கு பருவமழை தொடங்காமல் இருப்பதும் விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.