
திருநெல்வேலி
கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி திருநெல்வேலியில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 62 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் நிறுவனர், தலைவர் பாளை எஸ். ரபீக் தலைமைத் தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் "ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அம்மாவட்டத்தை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.
மாயமான மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் நலன்கருதி குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்.
ரப்பர், வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
முதல்வர் அறிவித்த நிவாரணம், மீனவர்கள் வாரிசுகளுக்கு அரசு வேலை ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் களந்தை சித்திக், மாவட்டச் செயலர் நெல்லை மைதீன், தென்மண்டல அமைப்புச் செயலர் இம்தியாஸ்மீரான் உள்ளிட்ட 62 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.