மத்திய அரசை எதிர்த்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 60 பேர் கைது... 

First Published Apr 5, 2018, 10:02 AM IST
Highlights
60 people arrested for allegedly locking passport office against central government


கடலூர்
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து கடலூரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுபோட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 60 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

உச்ச நீதிமன்றம் கூறியும், தமிழக மக்களின் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தயிருப்பதாக அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று காலை கடலூர் சுற்றுலா மாளிகை முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் கட்சியினர் ஒன்று திரண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பியபடி எதிரே மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

அப்போது, அங்கே பாதுகாப்புக்கு நின்ற கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவலாளர்கள் அந்த அலுவலகத்தின் முன்பக்க கதவை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தினர். 

இருப்பினும் கட்சியினர் கதவின் மேல் பகுதி வழியாக ஏறி வளாகத்துக்குள் புகுந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் யாரும் அலுவலகத்துக்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தின் உள்பக்க கதவை ஊழியர்கள் பூட்டு போட்டு பூட்டினர். 

உடனே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கதவின் வெளிப்பகுதியில் பூட்டுபோட்டு பூட்டி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கமலநாதன், ஒன்றிய செயலாளர்கள் ரிச்சர்ட் தேவநாதன், உலகநாதன், கார்த்தி, மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் செந்தில், 

மாணவர் அணி அருள்பாபு, மாநில மகளிர் அணி செயலாளர் அமராவதி மற்றும் நிர்வாகிகள் சிலம்பு, அல்போன்ஸ், வாசு, கிட்டுகுமார், தண்டபாணி, பாருக்கான் உள்ளிட்ட 60 பேரை காவலாளர்கல் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பாஸ்போர்ட் சேவை மையத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பூட்டு போட்டு பூட்டியதால் அலுவலக ஊழியர்களும், மக்களும் உள்ளே வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சாவியை வாங்கி வந்து பூட்டை திறந்தனர். இதன்பிறகு மக்களும், அலுவலக ஊழியர்களும் வந்து சென்றனர்.

click me!