
இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலையை , 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவில் மருந்து பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்த தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதுடன், அதன் தரம் உள்ளிட்டவற்றையும் கண்காணித்து வருகிறது. அந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
அதில், உயிர் காக்கும் 36 வகை மருந்துகளின் அதிகபட்ச விலையை குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல், உயிர் காக்கும் 15 மருந்துகளின் விலை உச்சவரம்பு குறைக்கப்பட்டது.
இதனால், இந்த மருந்துகளின் விலை 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை என்ற அளவுக்கு குறையும் என்று தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த சதவீதத்துக்கு மேல் மருந்துகளை விற்கும் நிறுவனங்கள், உடனடியாக மருந்துகளின் விலையை குறைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த விலை குறையும் மருந்துகளில் இதய கோளாறுகள், புற்றுநோய், கல்லீரல் அழற்சி உள்பட உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் அடங்கும் என்று அறிவிக்கப்படுள்ளது.
உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஊசி மருந்து பவுடரின் விலை, 28 சதவீதம் குறைய உள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்தின் விலை 48 சதவீதம் குறைகிறது.
மருந்துகளின் இந்த விலை குறைப்பால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.