
கரூர்
டெங்கு ஒழிப்புப் பணியில் மக்கள் சமுதாய அக்கறையோடு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்திநகர், பாரதிதாசன்நகர், தாந்தோணிமலை, இரட்டைவாய்க்கால், காமராஜ் சந்தைப் பகுதியில் டெங்கு தடுப்புப் பணி மற்றும் சுற்றுப்புற சுகாதாரப் பணி நடைபெறுவதை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்.
அப்போது அவர் கூறியது: "கரூர் நகராட்சி, தாந்தோணி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர், பாரதிதாசன் நகர், அரசுக் கலைக் கல்லூரி போன்ற சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பகுதிகளில் உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகள், தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
சைக்கிள் மற்றும் இருசக்கர பழுது நீக்குவோர் பயன்பாடற்ற வாகனங்களைத் தொடர்ந்து தங்களது கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தாந்தோணி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தாந்தோணி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இரட்டைவாய்க்கால் பகுதி காமராஜ் சந்தையில் இருந்து இரயில்வே இருப்புப் பாதை வரை தூர் வாரப்பட்டுள்ளது. காமராஜ் சந்தைக்கு தென்புறம் உள்ள பகுதி தூர்வாரப்பட உள்ளது. இதன்மூலம் கரூர் நகரின் முக்கிய கழிவுநீர் கால்வாயான இரட்டை வாய்க்காலில் கழிவு நீர் தடையின்றி செல்ல செல்ல பணி நடைபெற்று வருகிறது.
மக்கள் சமுதாய அக்கறையோடு இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்து குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்" என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.