மாதந்தோறும் 500 கோடி ரூபாய் இழப்பு.. பேருந்து கட்டண உயர வாய்ப்பு..? அதிகாரிகள் தகவல்..

By Thanalakshmi VFirst Published Apr 17, 2022, 12:18 PM IST
Highlights

டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, நாள்தோறும் 19 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. அரசு பேருந்து மூலம் தினமும் 1.50 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இதனால் அரசு பேருந்துகளை இயக்க தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் தேவையாக இருக்கிறது. தற்போது டீசல் விலை உயர்வால் தினமும் 17 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, சுங்கச்சாவடி கட்டணம்  உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாதந்தோறும் 500 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக செலவு ஏற்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், அரசு போக்குவரத்து கழகங்கள் சேவை நோக்கத்தோடு செயல்பட்டு, சீரான பேருந்து சேவையை வழங்கி வருவதாக, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசும் தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள், பேருந்து ஒரு கிலோ மீட்டர் இயக்கினால் 43 ரூபாய் வசூலாக வேண்டும். அப்போதுதான் வருவாயும்,செலவும் சரிசமமாக இருக்கும். கொரோனாவுக்கு முன் 1 கி.மீட்டருக்கு 33 ரூபாய் தான் வசூலானது. அப்போதே பெரும் சிக்கலை போக்குவரத்து கழகங்கள் சந்தித்ததாக தெரிவித்தனர்.

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, பேருந்துகளை சீராக இயக்க முடியவில்லை.  பேருந்தில் பயணம் செய்வர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு அதிகரித்தது. கொரோனா பரவல் குறைந்த பின், கடந்த பிப்ரவரி முதல் கட்டுபாடுகள் இன்றி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணியர் வருகையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இருப்பினும் கொரோனாவிற்கு முந்தைய நிலை இன்னும் ஏற்படவில்லை. குறிப்பாக, டீசல் விலை உயர்வால் மட்டும் மாதந்தோறும் 400 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாகிறது . இதற்கிடையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, டயர் போன்ற உதிரி பொருட்களின் விலை உயர்வால், அரசு போக்குவரத்து கழகங்களின் இயக்க செலவு அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 2018க்கு பின் ஒவ்வொரு முறையும் ஏற்படும் டீசல் விலை உயர்வுக்கான கூடுதல் தொகை, தமிழக அரசு வழங்கி வருகிறது . கொரோனா பரவல் குறைந்துள்ளதால், அரசு பேருந்துகளில் பயணியர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மே மாதங்களில் தினசரி பயணியர் எண்ணிக்கை மீண்டும் 1.90 கோடியாக உயரும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

click me!