ஒரு நிமிடம் 27 நொடிகளில் 160 மூலிகைத் தாவரங்களின் பெயர்களை கூறி ஐந்து வயது தேனி மாவட்டச் சிறுமி உலகச் சாதனைப் படைத்து அசத்தியுள்ளார்.
தேனி நட்சத்திரா அகாடெமி நிறுவனத்தின் சார்பில் சாம்பியன் உலகச் சாதனைக்கானத் தேர்வு தேனி மாவட்டம், போடி, துரைராஜபுரம் காலனியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போடி ஐ.கா.நி. மேல்நிலைப் பள்ளித் தலைவர் வடமலை இராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தார்.
இந்த சாம்பியன் உலகச் சாதனைக்கானத் தேர்வில் துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் வனிதா தம்பதியின் மகள் விகாஷினி பங்கேற்றார். ஐந்து வயதேயான இவர் 1 நிமிடம் 27 நொடிகளில் 160 மூலிகைத் தாவரங்களின் பெயர்களை கூறினார். அதுமட்டுமின்றி, கணினியில் காட்டப்பட்ட மூலிகைத் தாவரங்களின் பெயர்களையும் சரியாகக் கூறி அசத்தினார்.
இதனையடுத்து விகாஷினிக்கு சாம்பியன் உலகச் சாதனையாளருக்கான விருது மற்றும் சான்று வழங்கப்பட்டது. இதற்குமுன் 7 வயது சிறுமி மூன்று நிமிடங்களில் செய்த சாதனையே முதலில் இருந்தது. தற்போது ஐந்து வயது விகாஷினி ஒன்றரை நிமிடத்திற்கு உள்ளாக சாதித்து பழைய சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த சாதனைக் குறித்து விகாஷினி, "தேனி நட்சத்திரா அகாடெமியில் உலகச் சாதனை பதிவேட்டில் தனதுப் பெயரைப் பதிவுச் செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையான பயிற்சிப் பெற்றேன். சாதித்தும் விட்டேன்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை உதவி ஆணையர் முத்து மணிகண்டன், சாம்பியன் உலகச் சாதனை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விசுவகாந்த் மற்றும் தேனி நட்சத்திரா அகாடெமி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.