விமான  நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள கொகைன்   சிக்கியது -   அயன் பட பாணியில் வயிற்றில் மறைத்து கடத்திய பெண் கைது

 
Published : Jan 28, 2017, 06:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
விமான  நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள கொகைன்   சிக்கியது -   அயன் பட பாணியில் வயிற்றில் மறைத்து கடத்திய பெண் கைது

சுருக்கம்

நடிகர் சூர்யா  நடித்த அயன் படத்தில் கடத்துவதுவது போல் , வயிற்றில் கேப்சூல்களாக மறைத்து  5 கோடி ரூபாய் மதிப்புள்ள  கொகைன் போதை பொருளை கடத்தி வந்த தென் ஆப்ரிக்க பெண் சென்னை  விமான நிலையத்தில் பிடிபட்டார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து அபுதாபி வழியாக சென்னைக்கு விமானம் ஒன்று இன்று வந்தது. இந்த விமானத்தில் வரும் பெண் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருவதாக சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது.

 இதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர்  விமானத்தில் வந்த பயணிகளை கண்காஅணித்தனர். அப்போது சந்தேகப்படும் விதமாக இருந்த ஒரு தென் ஆப்ரிக்க  பெண்ணை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

ஆனால் அவரிடம் போதை பொருள் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை ஸ்கேன் செய்த போது  அந்த பெண் போதைப் பொருளை கேப்சூல்களாக விழுங்கி வயிற்றில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

உடனடியாக  அந்தப் பெண்ணுக்கு எனிமா கொடுக்கப்பட்டு  வயிற்றில் மறைக்கப்பட்டு கொண்டு வந்த கேப்சூல்களை வெளியே எடுத்தனர். 

 மொத்தம் 82 கேப்சூல்களை அவர் விழுங்கியிருந்தது தெரிய வந்தது.  அவற்றின் மொத்த எடை ஒரு கிலோ 75 கிராம் இருந்தது. அந்த கேப்சூல்களை சோதித்த போது அதில் கொகைன் என்னும் போதை பொருள் இருந்தது.

இவற்றின் சர்வதேச  மதிப்பு ரூ. 5 கோடி  ஆகும். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர்  பெயர்  பிரின்சஸ் டாம்ஃபிபுதி சோமி என்பதும்,  சுற்றுலாப்பயணி விசாவில் தென் ஆப்ரிக்காவிலிருந்து  அந்தப் பெண் சென்னை வந்தது  தெரியவந்தது.

 மேலும் இந்தப் பெண் தென் ஆப்பிரிக்காவில் இயங்கும் போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சென்னையில் அவர் யாருக்காக இந்த போதை பொருளை கடத்தி வந்தார், சென்னையில் இதன் கீழ் இயங்கும் போதை பொருள் கும்பல் யார் யார். கொகைன் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த  அதிகாரி  ஒருவர்  , பொதுவாக போதை பொருள் கடத்தல் கும்பல்  சாதாரண  அப்பாவிகளை பெரும் தொகை கொடுப்பதாக ஆசைக்காட்டித்தான் இது போன்ற  செயலில் ஈடுபடுத்துவார்கள்.

அவர்களுக்கு எதுவும் தெரியாது. சென்னைக்கு  வந்தவுடன் அவரை அழைத்து செல்ல தயாராக இருக்கும் கும்பல் அழைத்து சென்று தனியிடத்தில் வைத்து கேப்சூலை எடுப்பார்கள். ஒரே ஆளை  திரும்ப திரும்ப பயன்படுத்த மாட்டார்கள்.

கடத்தி வரும் அப்பாவிகள் பிடிபட்டால் அவர்கள் சத்தமில்லாமல் நழுவி விடுவார்கள் . இதனால் இதன் பின்னால் இயங்கும் கும்பலை பிடிக்க முடியாது. இந்தியாவில் இதற்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. 

சில நாடுகளில் மரண தண்டனையும் உண்டு என்று தெரிவித்தார். இருந்தாலும் பிடிபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பேருந்தை அடிச்சு தூக்கிய அரசு பேருந்து.. இவ்வளவு வசதிகள் இருக்கா? வியப்பில் பொதுமக்கள்
பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்த அருகோ காலமானார்..! தமிழ் தேசியவாதிகள் அஞ்சலி