
திருப்பதி கோயில் லட்டு சர்ச்சை
திருப்பதி கோயிலுக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்ல பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அந்த வகையில் திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆந்திர மக்களை மட்டுமல்ல இந்திய மக்களை அனைவரையும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் பரபரப்பான செய்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டில் மாட்டின் கொழுப்பு கலக்கப்படுவதாக கூறினார்.
அதிர்ச்சியில் மக்கள்
இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை தீவிரம் அடைந்தது. மேலும் திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனங்களிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் ஏ ஆர் டைரி உரிமையாளர் ராஜசேகரன் உட்பட நான்கு பேரை சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று நள்ளிரவு கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி திருப்பதி சிறையில் அடைத்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பிரசாதம் தயார் செய்ய நெய் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை சப்ளை செய்தது ஆய்வு சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
நெய் நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் கைது
நீண்ட ஆய்விற்கு பின் திண்டுக்கலை சேர்ந்த வைஷ்ணவி டைரி தலைமை நிர்வாக அதிகாரி வினைகாந்த், ஏ ஆர் டைரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன், போலே பாபா டைரி இயக்குனர்கள் விப்பின் ஜெயின், பொமில் ஜெயின் ஆகியோரை சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தவர்கள் நேற்று நள்ளிரவு திருப்பதி இரண்டாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பவின் குமார் முன் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆஜர் பத்தினர். அப்போது அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.