கள்ளக்குறிச்சி வன்முறை.. தீயிட்டு கொளுத்தப்பட்ட வாகனம்.. வீடியோ ஆதாரங்களைக் கொண்டு மேலும் 4 பேர் கைது..

By Thanalakshmi VFirst Published Aug 17, 2022, 8:05 AM IST
Highlights

கள்ளிக்குறிச்சி கனியாமூரில் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக வீடியோ ஆதாரங்களில் அடிப்படையில் மேலும் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
 

சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பள்ளியை முற்றுகையிடுவதாக பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டதில், அது வன்முறையாக மாறியது. 

திடீரென்று நுழைந்த கும்பல், பள்ளி வளாகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும் வகுப்பறைக்குள் இருந்த மேஜை, நாற்காலி, மாணவர்களின் அசல் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் கலவரங்காரர்களை தடுத்த நிறுத்திய காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. விழுப்புரம் சரக டிஐஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். 

மேலும் படிக்க:அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு.. முட்டி மோதும் ஒபிஎஸ் - இபிஎஸ்.. இன்று தீர்ப்பு.. வெல்ல போவது யார்..?

அண்டை மாவட்டங்களில் இருந்து சிறப்பு படை வரவழைக்கப்பட்டு, வன்முறையாளர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வன்முறையின் போது பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தியதாகவும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவினர் மற்றும் சிபிசிஐடி போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனியிடையே கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டதாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் படி, சின்ன சேலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சந்தோஷ், மணிவர்மா, நவீன்குமார்,முருகன் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து, கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க:பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு... பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

click me!