நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் விவகாரத்தில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திற்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லையென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4 கோடி ரூபாய் பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் விறு விறுப்பாக நடைபெற்ற போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த பணம் விவகாரம் தொடர்பாக போலீசார் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் நயினார் நாகேந்தரின் கால அவகாசம் கேட்டிருந்தார்.
சம்மன் அனுப்பிய போலீஸ்
தொடர்ந்து பாஜக மூத்த நிர்வாகி சேகரின் வீட்டிற்கும் போலீசார் நேரில் சென்று விசாரித்துள்ளனர். இந்தநிலையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் தொடர்பாக தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனுக்கு எதிராக பா.ஜ. க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள கேசவ விநாயகம்,
விசாரணைக்கு தடையில்லை
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணன் முன்பு வந்தது. அப்போது, கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லையென தெரிவித்த நீதிபதி, இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் கைக்கூலி தான் சவுக்கு சங்கர் - திருச்சி சூர்யா சிவா அதிரடி