
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து 3வது நாளாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று 23வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவும் கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சை அளித்து சென்றனர்.
அதன்பின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அடிக்கடி அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.
தற்போது மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் குழுவினரும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் சென்னை வந்துள்ளனர்.
டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் குழு இணைந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார். இவர்கள் அனைவரும் இன்னும் ஒரு சில நாட்கள் சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சையை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில, தொடர்ந்து 3வது நாளாக எய்ம்ஸ் மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 3 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் வந்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, நிதீஷ் நாயக், அஞ்சன் த்ரிகா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.